July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணங்கியதை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி:

நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் அமைதியின்மை நிலவி வருகின்றது.

பார்க் தோட்ட முகாமையாளர் தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருவதுடன் அங்கு தற்போது பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தோட்டங்களில் அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 305 வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

எனினும், குறித்த காணிகளை வழங்க தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புக்களை மேற்கொண்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் அங்கு சென்றுள்ளார்.

இதன்போதே தோட்ட முகாமையாளர் பெருந்தோட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.