மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்று நடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வின் போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்களது நினைவு உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலப் பின்னணியில் நாங்கள் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களது அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்கின்ற விடயங்களை இந்த பிரகடனம் உள்ளடக்கி நிற்கின்றது.
காலம் காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எடுத்துவந்த தமிழ்த் தேசிய நிலைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் நமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஆகவே மீண்டும் ஒருமுறை இந்த வருடமும் சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என மீண்டும் உரத்து ஒலிப்போம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.