சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் பிலடெல்பியா மிஷனரி கிறிஸ்தவ சபையின் ஸ்தாபகரும் போதகருமான போல் சற்குணராஜா காலமானார்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த போதகர் போல் சற்குணராஜா தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து மீண்டிருந்தார்.
சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் அவர் நேற்றிரவு காலமானதாக அவரது பிலடெல்பியா மிஷனரி அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச்சில் முதல் அலை கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போல் சற்குணநாதன் நடத்தியிருந்த ஜெபக்கூட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவரது ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, யாழ்ப்பாணத்தில் அந்த ஜெபக்கூட்டத்தின் மூலமே தொற்று முதலில் பரவியிருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஜெபக்கூட்டத்தை நடத்திவிட்டு சுவிஸ் திரும்பியிருந்த போதகர் சற்குணராஜா, கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அந்த நோயிலிருந்து மீண்டிருந்தார்.
மீண்டும், இணையவழியில் ஜெபக்கூட்ட ஆராதனைகளை தொடங்கியிருந்த அவர், யாழ்ப்பாணத்தில் தன் மூலமே கொரோனா பரவியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
ஆனால், கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை வேண்டும் குறித்த ஜெபக் கூட்டத்தை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்ல முன்னரே, சுவிஸில் அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக இலங்கை அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் 1959 ஆம் ஆண்டு பிறந்த சிவராஜா போல் சற்குணராஜா, 1980 ஆண்டு ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்திருந்தார்.
அங்கிருந்து 1982 இல் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த அவர், 1989 இல் கிறிஸ்தவராக மதம் மாறினார்.
1996 ஆம் ஆண்டு முதல் போதகராக பணியாற்றிவந்த போல் சற்குணராஜா, பேர்ன் நகரில் பிலடெல்பியா மிஷனரியை நிறுவினார்.
பேர்ன் நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த போதகர் போல் சற்குணராஜாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.