January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி பனை, தென்னை கூட்டுறவுச் சங்க புதிய இயக்குநர் சபைக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் இருவர் முன்னெடுத்து வந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி, 5 பேர் கொண்ட புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 5 ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளைக்குழு தேர்தலை நடாத்தி புதிய நிர்வாத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சின்னப்பொடியன் புலேந்திரன், மாணிக்கம் தவராசா ஆகிய இருவரால் நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்று திரண்டு அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது உண்ணாவிரதம் இருக்கும் இரு அங்கத்தவர்களது உயிர்களில் வடக்கு மாகாண ஆளுநர் அக்கறை கொண்டு அவர்களது போராட்டத்திற்கான தீர்வினை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரின் கோரிக்கைகள் தொடர்பிலும் நான் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அதேபோல மாகாண கூட்டுறவு ஆணையாளருக்கும் இந்த விடயத்தை தெரியப்படுத்தியிருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே அவர்களுடைய நிலைமை மிக மோசமாகவுள்ளதால் இந்த விடயத்தில் வடக்கு ஆளுநர் உடனடி கவனம் எடுத்து இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் பராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

This slideshow requires JavaScript.