இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவி வருகின்ற நிலையில் அரசாங்கம் நாட்டை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளதுடன், சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளமையானது மீண்டும் வைரஸ் பரவலை அதிகப்படுத்தும் என அந்த சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகியுள்ளது எனவும் பொதுச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் சகல பகுதிகளையும் திறந்தவுடன் மக்கள் கட்டுப்பாடுகள் சுகாதார வழிமுறைகள் என எதனையும் கருத்தில் கொள்ளாது அநாவசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டதன் விளைவே இப்போது அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட புதிய வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவி வருகின்றது.
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் இதுவரை காலமாக காணப்பட்ட வைரஸ், பிரித்தானியாவில் காணப்படும் வைரஸுக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது எனவும் பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.