November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க இலங்கை ஜனாதிபதி தீர்மானம்

இறுதிக்கட்ட போர் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் யோசனை ஒன்றினை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளது.

இதன்படியே குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார்.

நாளை தினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படுவதுடன், அந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஆணைக்குழு அடுத்து கூடவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிதாக தீர்மானம் ஒன்றினை வரையவும், அதனை ஜெனிவாவில் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக இலங்கை கையாளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவும் நடவடிக்கையெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.