பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடைப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகாரிக்குமாறும், மாதத்தில் 25 நாள் வேலை வழங்குமாறும் கோரி ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உரிமைக்கான இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் கறுப்பு பட்டியை தலையில் அணிந்திருந்ததுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதை தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசாங்கம் உறுதியளித்தப்படி தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் இதை இழுத்தடிப்பு செய்வதற்கு இடமளிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் போராட்டத்தினை விஸ்தரிக்க நடவடிக்கையெடுப்போம் என்றும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.