July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்: முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், இதர கொடுப்பனவுகள் அடங்களாக 1105 ரூபா மொத்த சம்பளத்தை வழங்கக் கூடிய வகையிலான யோசனையொன்றை முதலாளிமார் சம்மேளனம் தொழில் அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பாக 105 ரூபாவும் அடங்கலாக 855 ரூபா வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதால், ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று கடந்த நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போது பிரதமர் உறுதியளித்திருந்தார்.

ஆனால் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள முதலாளிமார் சம்மேளனம், சம்பளம் அதிகரிக்கக் கூடிய முறை தொடர்பாக புதிய யோசனையொன்றை தொழில் அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

இதன்படி 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கு மேலதிகமாக உற்பத்தி கொடுப்பானவாக 150 ரூபாவும், வரவுக்கான கொடுப்பனவாக 150 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பாக 105 ரூபாவும் வழங்க முடியுமென அறிவித்துள்ளது.

ஆனபோதும் தொழிற்சங்கங்கள் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இது தொடர்பாக இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர முடியாவிட்டால், ஊதியக் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதைக் காட்டிலும் வேறு மாற்று வழி இல்லையென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.