File Photo
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவுக்கும், துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
துறைமுகங்கள் அமைச்சில் இரண்டு மணித்தியாலங்களாக பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும், இங்கு தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை என்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த போதும், அது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்கள் இருவர் மாத்திரமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தை நூறு வீதம் இலங்கையே நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, துறைமுக தொழிற்சங்கங்கள் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளன.
ஆனால் அரசாங்கத்தின் சார்பில் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவை உபகுழுவினர் அவ்வாறான நிலைப்பாட்டுக்கு இணங்கியிருக்கவில்லையென்று அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் கடுமையான தொழிற்சங்க தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்களையடுத்து தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் அதற்கு எதிர்ப்புகளை வெளியிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.