July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மீதான விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு தமிழர் பிரதிநிதிகள் கூட்டாகக் கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு தமிழர் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை மீதான 40/1 தீர்மானத்தின் கீழ் அரசாங்கம் வழங்கியிருந்த உறுதிமொழிகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆராயப்படவுள்ளன.

அதன்போது, இலங்கையில் இராணுவ மயமாக்கல், அரசியல் கைதிகளை கால வரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் ‘நில அபகரிப்பு’, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரிய- கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கண்காணிப்பது, கொவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசா அடக்கத்தை மறுத்தல், நினைவேந்தல் உரிமையை மறுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழர் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் விதிவிலக்கு இல்லாமல், படையினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்பதாக கூறிவருகின்ற நிலையில், ஓர் உள்ளக பொறிமுறையின் ஊடாக இலங்கையை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன;

1) இலங்கையை இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐநா பொதுச்சபை, ஐநா பாதுகாப்புப் பேரவை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2) ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் ஐநா தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

3) இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற மீறுதல்களை கண்காணிக்கவும், இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் கள நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரை உறுப்பு நாடுகள் கோர வேண்டும்.

4) மேலே 1) இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐநா பொதுச் சபையின் துணை அமைப்பாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (IIIM) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்படல் வேண்டும் எனவும் இதுவரையும் நீதி மறுக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும், காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பு நாடுகளுக்கு தமிழர் தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.