
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு, கடந்த 25 நாட்களாக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நபரின் உடல் நேற்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த குறித்த நபரின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று குறித்த ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து, உடலை எரிக்க முற்பட்டபோது, குடும்பத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, அவரது பிசிஆர் அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அந்த அறிக்கையின் பிரகாரம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறு அவரது குடும்பத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதிலும், அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபினால் முறைப்பாட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, நீரிழிவு நோயின் அதீத தாக்கம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியானதோடு, ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.