July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்

இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் டி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் கொழும்பு நோக்கி புறப்படவுள்ளன.

முதலாவதாக உத்தரதேவி கடுகதி ரயில், காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படவுள்ளது. அந்த ரயில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அங்கிருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் என்று டி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் தேவி ரயில் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படவுள்ளதுடன், அது யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும் அங்கிருந்து முற்பகல் 9.45 மணிக்கு புறப்படவுள்ளது.

அவ்வாறே கொழும்பு கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்ததும் அங்கிருந்து காலை 6.35 மணிக்கு புறப்படவுள்ளது. அத்துடன் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து மற்றுமொரு ரயில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து 25 ஆம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட மற்றைய அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது என்று யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் டி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.