January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் உப தலைவர்களிடம் கையளிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தலைவர்களின் அதிகாரங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள் அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, பதியத்தலாவை பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, அதன் தலைவர் ஹேரத் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பதியத்தலாவை மன்றத்துக்கான புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை, பிரதேச சபையின் உப தலைவர் கோணபுரவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்காமம் பிரதேச சபை தலைவர் ஜமால்தீன் ஹபீப் ரஹ்மான் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதோடு, அந்த அதிகாரங்கள் பிரதேச சபையின் உப தலைவர் அஹமட் லெப்பை நௌஃபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஏறாவூர் பிரதேச சபையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் அதிகாரங்கள் உப தலைவர் மீரா லெப்பைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மண்முனை பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, மண்முனை பிரதேச சபையின் அதிகாரங்கள் உப தலைவர் மாசிலாமணி சுந்தரலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை நகர சபை தலைவர் மனோதர ஆசாரிகே சமிந்த சுகத் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, அவருக்குரிய அதிகாரங்கள் உப தலைவர் துலிப் லால் குமாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.