July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாண தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவுகள்; அறிக்கை கோரும் ஆளுநர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிக்கை கோரியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்தே, ஆளுநர் இவ்வாறு அறிக்கை கோரியுள்ளார்.

கொரோனா தொற்று அவதானமுள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கான உணவுப் பொருட்களை சுகாதாரத் துறை மற்றும் இராணுவத்தினர் விநியோகித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றமை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கரடியனாறு மற்றும் காத்தான்குடி தனிமைப்படுத்தல் நிலையங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள், உட்கொள்ள முடியுமான தரத்தில் இல்லை என்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாகாண பதில் சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.