January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நினைவேந்தல் உரிமையைத் தட்டிப் பறிப்பது அடக்குமுறையின் உச்சம்’

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வர வேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்குமுறையின் உச்சக்கட்டத்தையே எடுத்துக்காட்டுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரில் இறந்த தமது குடும்பத்தினரை – உறவினர்களை நினைவுகூரத் தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அதை எந்தச் சட்டங்கள் ஊடாகவும் தடுத்து நிறுத்த முடியாது.

நினைவுத் தூபிகளை உடைப்பதும் அழிப்பதும் இறந்த ஆன்மாக்களைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை.

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வர வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திக்கூற விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.