July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா நகரில் ஒருவாரத்தில் 170 பேருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 51,594 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 512 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,259ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6,905 பேரே சிகிச்சைப் பெற்று வருவதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று 4 உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்காமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் 5 அதிகாரிகளுக்கு தொற்று

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும், பாராளுமன்ற ஊழியர்கள் 450 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.
ஆனால் பாராளுமன்ற அதிகாரிகள் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்றைய தினத்தில் மேலும் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 490 பாராளுமன்ற ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவர்களின் பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளன.

வவுனியாவில் 16 பேருக்கு தொற்று

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியா நகர வியாபாரநிலையங்களில் பணிபுரியும்13 பேருக்கும் ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 170 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை, பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இது வரை 47000 பேருக்கு பரிசோதனை

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதிம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரை 41248 பேருக்கும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 6435 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 644 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.