January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த திருகோணமலை பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆர்.ஏ.எஸ்.டி. ரத்நாயக்க இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டாம் முறையாக தோற்கடிக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சி.மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது 22 உறுப்பினர்களைக் கொண்ட உப்புவெளி பிரதேச சபையில் கூடுதலான உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்தமைக்கமைய வாக்கெடுப்பு நடை பெற்றது.

இதன்போது வாக்கெடுப்புக்கு விட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கராசா சார்பாக 10 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ரத்நாயக்கா சார்பாக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் 3 உள்ளூராட்சி சபைகள் உள்ள நிலையில் அதில் உப்புவெளி சபை தோற்கடிக்கப்பட்டுள்ளது.