மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 வாக்காளர் பதிவுகளை, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும் மீண்டும் அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு ஆவன செய்யுமாறு ரிஷாட் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்த மாவட்டத்திலுள்ள வாக்காளர் இடாப்பை மாற்ற முடியாது.
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட 7,727 வாக்காளர்களையும், அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு தடுக்கப்பட்ட மன்னார் பிரதேச சபை 2618, முசலி பிரதேச சபை 3452, மாந்தை மேற்கு பிரதேச சபை 1217, நானாட்டான் பிரதேச சபை 457, மன்னார் பிரதேச சபை 342 வாக்காளர்களையும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க ஆவன செய்யுமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.