July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாணத்தில் திருமண மண்டபங்கள், பொதுச் சந்தைகளை திறப்பதற்கு அனுமதி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமையால் கடந்த வாரங்களாக மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி வவுனியா மாவட்டம் தவிர்ந்த வடக்கில் மற்றைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இவற்றை திறக்க முடியுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகமாக உள்ளதால், அந்த மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்களை திறப்பதற்கும், அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுச்சந்தைகளையும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிப்பதாகவும் குறித்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.