இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையின் போது தேவாலாயத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் மேலும் நால்வரும் விடுதலை செய்யப்படுவதற்கு நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவே காரணம் என்று அவரது சட்டத்தரணியை மேற்கோள்காட்டி எக்கொனமிநெக்ஸ்ட் (ECONOMYNEXT) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை வாபஸ்பெற்றுக் கொள்வதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா அறிவித்ததை அடுத்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை விடுதலை செய்தது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் பிறப்பு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமும் அவரது மனைவி சுகுனம் பரராஜசிங்கமும் நற்கருணை அப்பத்தை பெற்றுவிட்டு தமது ஆசனங்களுக்கு திரும்புகின்ற வேளையில் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டார். அவரது மனைவி சுகுனம் பரராஜசிங்கம் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆயுததாரிகள் பிள்ளையான், கருணா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஆயுதக்குழு தங்கியிருந்த ‘பல்பொடி இராணுவ முகாம்’ பகுதிக்குள் தப்பியோடியதை நேரில் கண்டவர்கள் கூறியிருந்தனர்.
கைது செய்யப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்றம் தொடர்பில், குற்றம் சாட்டவர்களில் இருவர் அளித்த “குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை” அடிப்படையாக வைத்தே குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர் எக்கொனமிநெக்ஸ்ட் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
“குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வேறு சான்றுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரகாந்தனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை அடுத்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை சான்றாக ஏற்றுக்கொள்வதை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த நவம்பர் 14- ஆம் திகதி நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானமே, சந்திரகாந்தன் மற்றும் ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் டி லிவேரா வாபஸ் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்ததாகவும் சட்டத்தரணி மங்களேஷ்வரி கூறியுள்ளார்.