கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையில் ‘பார்க் என்ட் ரைட்’ வேலைத்திட்டத்தின் கீழ் சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகமாக வாகன நெரிசல் ஏற்படும் ஹைலெவல் வீதியில் ஹோமாகம மாகும்புரவில் இருந்து கொழும்புக்கு ‘சிட்டி பஸ்’ என்ற பெயரில் இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று முதல் பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த பஸ் சேவைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக கொழும்பு நகருக்குள்ளும், புறநகர் பகுதியிலும் வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களினூடாக பணி இடங்களுக்கு செல்வதால் வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக அவ்வாறானவர்கள் தங்களது வாகனங்களை ஒரு இடத்தில் நிறுத்திவைத்து, அங்கிருந்து அதிசொகுசு போக்குவரத்து பஸ் ஊடாக உரிய இடத்திற்கு செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்புக்குள் நுழையும் ஏனைய வீதிகளிலும் குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.