July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வியே”

முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை கைவிடுவதற்கு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்திருப்பது, நீதியின் தோல்வி என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தலை தொடர்ந்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் வழக்குடன் தொடர்புடைய சிவசேனதுரை சந்திரகாந்தான் (பிள்ளையான்) உட்பட நால்வரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குனர் டேவிட் கிறிப்த், இதனை நீதியின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளர்.

அத்துடன் யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கின் விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்த ஆர்வம் எதனையும் சட்டமாஅதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை எனவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார் .

பொறுப்புக்கூறப்படுதல் இல்லாமல் இலங்கையால் தனது வரலாற்றின் இருண்ட பக்கங்களை கடந்து போக முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து அதிகாரிகள் புதிய விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தைமுடிவிற்கு கொண்டுவருவதற்கும், மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குனர் டேவிட் கிறிப்த் குறிப்பிட்டுள்ளார்.