July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் யோசனை’

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பெப்ரவரி மாதத்தில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் இங்கிலாந்தின் “ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவே ஆராயப்படுகின்றது.

இங்கிலாந்தின் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கை ஒன்று கைச்சாதிட்டப்பட்டுள்ளதை அடுத்து எம்மால் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் இலங்கையில் நாம் என்ன செய்ய வேண்டும், களஞ்சியப்படுத்துவது எவ்வாறு, எத்தனை நாட்களுக்குள் தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும், எவ்வாறு சகல பகுதிகளுக்கும் இவற்றை பங்கிடுவது என்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இப்போதே இது குறித்த ஆராய்வு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.