July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் சமூகத்துக்குப் பரவ வாய்ப்பில்லை’

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் சமூகத்துக்குப் பரவ வாய்ப்பில்லை என்று தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொரோனா தொற்று விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரொருவர் புதிய வகை கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இலங்கையர்களுடன் தொடர்புபடாத காரணத்தினால், புதிய வகை கொரோனா சமூகப் பரவல் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளால் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த முடியுமான நிலை தொடர்வதாகவும் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.