நீதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத் தணிப்பு பணிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 8.26 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி மற்றும் இலங்கை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கையின் நீதித் துறையைப் பலப்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, பருவநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பான திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்கு உரிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, பருவநிலை மாற்றம் காரணமாக எழுந்துள்ள பொதுவான சவால்களுக்கு இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்து செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.