
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை இலங்கை மக்கள் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் ஆலயங்களிலும், வீடுகளிலும் பொங்கல் வைத்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலயங்களில் பூசை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்வதால் கடுமையான சுகாதார சட்ட கட்டுப்பாடுகளுடனேயே மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
வவுனியாவில் களையிழந்த பொங்கல் பண்டிகை
வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளநிலையில் அங்கு 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நகரில் அமைந்துள்ள முக்கிய ஆலயங்களில் இம்முறை பொங்கல் நிகழ்வோ பூசை அனுட்டானங்களோ பெரியளவில் இடம்பெற்றிருக்கவில்லை.
வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் சுகாதாரநடைமுறைகளை கடைப்பிடித்து சிறியளவில் பொங்கல் நிகழ்வும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை நகரின் முடக்கம் காரணமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை இம்முறை பெரியளவில் களைகட்டியிருக்கவில்லை.