
இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் புவெலிகட என்ற இடத்தில் 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றே இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
மீட்புப் பணியின்போது உயிருடன் மீட்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை பின்னர் உயிரிழந்தது.குழந்தையின் பெற்றோரின் உடல்களும் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
சமில பிரசாத் (35 வயது) மற்றும் அவரது மனைவியான (32 வயது) சட்டத்தரணி அச்சலா ஏக்கநாயக்க ஆகியோரின் உடல்களே மீட்கப்பட்டன.கடந்த சில நாட்களாக குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருகின்றது. இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.