November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் எச்சரிக்கப்பட்டு விடுதலை

இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வழக்கின் காத்திரத்தன்மையை இந்திய மீனவர்கள் தரப்பு புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நீதிபதி நேரடியாகவே மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் முடிவில்,மீனவர்கள் பயணித்த நான்கு படகுகள், மீன்களின் ஒலியை கண்டறிய பயன்படுத்தப்படுகின்ற எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட்ட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

அத்துடன் குறித்த மீனவர்களே எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இறுதி இந்திய மீனவர்களாக இருக்கவேண்டும் என்றும் இந்த எச்சரிக்கையை மீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவர்களின் பொருட்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்றும் எச்சரித்து விடுதலை செய்தார்.

குறித்த வழக்கின் போது நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.