July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்”

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவதே எமது அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என்று ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவதே எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும், எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.