File Photo: Twitter/ Srilanka red cross
இலங்கையில் இன்றைய தினத்தில் 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50,224 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 646 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,267ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது கொரோனா சிகிச்சை நிலயங்களில் 6394 பேரே சிகிச்சைப் பெற்று வருவதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று 3 உயிரிழப்புகள் பதிவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்காமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247 ஆக உயர்வடைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்றைய தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படட்டுள்ளன.
இதன்போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் பாராளுமன்ற வளாகத்தில் பிசிஆர். பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வகை கொரோனா தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பம்
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றுடன் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்த இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதியானதை தொடர்ந்து அவரின் பிசிஆர் மாதிரிகள் ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் ஆய்வுப் பிரிவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளை நடத்தி இலங்கையில் அது பரவாத வகையில் முன்னெடுக்கக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.