November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கில் வெள்ளம் : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் பல மாவட்டங்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி,  யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களைச் சேர்ந்த 1745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பலத்த மழையால் 77 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 41 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களைச் சேர்ந்த 2108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 15 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 தற்காலிகள வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிகாக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 263 புர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவில் 194 குடும்பங்களை சேர்ந்த 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம்  அதிகரித்துள்ளதால்  தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
 இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 5 அங்குலத்தை தாண்டும் நிலையில், வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டு இருப்பதுடன் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.
இதனால்  முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்தின் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன.
இதேவேளை இந்தப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால்  தமது கால்நடைகளையும் உடமைகளையும் கொண்டு மக்கள்  வெளியேறி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,452 குடும்பங்களைச் சேர்ந்த 4,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கடந்து 3 தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றதையடுத்து, தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ளத்தினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மண்முணைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும் மண்முணை தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும் போரதீவு பிரதேச செயலகப் பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேர் உட்பட 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளம் அதன் கொள்ளவான 19.4 அடியைக் கடந்துள்ளமையால் அதன் மூன்று வான் கதவுகளும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளிலும், அதன் தாழ் நிலப் பகுதிகளிலும் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 18 சிறு குளங்களில் 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ஜீ.சுஜிதரன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை குளமும் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாகல்லம்பத்த குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மடுவக்குளமும் இவ்வாறு உடைப்பெடுத்துள்ளன.

This slideshow requires JavaScript.