ஐக்கிய தேசிய கட்சிக்கான பாராளுமன்ற அங்கீகாரம் தலைவரிடம் இருக்க வேண்டும் என்பதே நியாயமானது. ஆகவே தேசியப் பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் பதவி நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கான வெற்றிடம் இன்னமும் நிலவுகின்றது.
எனவே அந்த பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என்ற ஏகமனதான கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியினர் செயற்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.
மேலும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பொறுப்பை அவர் ஏற்றே ஆகவேண்டும் எனவும் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இதற்கு ரணில் விக்கிரமசிங்க எந்தவித பதிலையும் செயற்குழுவில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.