November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக அளவில் கொரோனா முடக்க நிலை காரணமாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றான ஆடை ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா முடக்க நிலை காரணமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் விகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மே மாதம் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பதிவான தரவுகளின்படி, ஆடை ஏற்றுமதி விரைவான வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

எனினும் ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 403.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது மே மாதத்தில் பதிவானதை விடவும் இரு மடங்கான அதிகரிப்பைக் காட்டியுள்ளதோடு, ஜூலை மாதத்தில் 469.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

எனினும், இதற்கு பிந்தைய காலப்பகுதியில் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார முடக்க நிலையை அறிவித்ததையடுத்து, ஒக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் ஆடை ஏற்றுமதியில் தொடர் வீழ்ச்சி நிலை அவதானிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.