
தமது மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநாகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமையை கண்டிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி அந்த சம்பவத்தை கண்டித்து சபை அமர்வை ஐந்து நிமிடங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை மாநகர சபை எல்லைக்குள் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரான முன்னாள் மாநகர சபை முதல்வர் தனது கட்சின் நிலைப்பாட்டை அறிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் மாநகர சபையின் மற்றைய உறுப்பினர்களும் தமது நிலைப்பாடுகளை பதிவு செய்தனர்.