
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில்
யாழ் மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால், 358 குடும்பங்களைச் சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில்
தொடரும் மழையால், கிளிநொச்சி மாவட்டத்தில் 407 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 9 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை காரணமாக 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முள்ளியவளை மேற்கு கிராம சேவகர் பிரிவில் இரு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
மன்னாரில்
மன்னார் மாவட்டதில் கடந்த சில தினங்களாக தொடரும் சீறற்ற கால நிலை காரணமாக மாவட்டத்தில் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.
இதனால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய செய்கை அழிவு தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தரவுகளை சேகரித்து வருவதுடன் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் சேல்வேரி, தச்சினா மருதமடு போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச் சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதேவேளை வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளத்தினால் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேரும், மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மண்முணை தெற்கு மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும் போரதீவு பிரதேச செயலக பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேர் உட்பட 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
அம்பாறையில்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.