January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் அழுத்தங்களினாலேயே நினைவுச் சின்னத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது’

முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டவுடன் இந்திய தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே இந்த விடயத்தைச் சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றம் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடம் உடைக்கப்பட்டு, மீள அமைக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் முடிவுக்கு வந்தது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நினைவு தூபிகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் கட்டட அனுமதி தேவையில்லை. அவ்வாறானால் வட-கிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவிடங்களும் உடைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மரித்தது உண்மை. அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் எண்ணிலடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டார்களே. எதிர்த்தரப்பு போராளிகள் அவர்களையும் நினைவு கூர வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக சமூகத்தினர் மரணித்ததை நினைவு கூறுவதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் ஒன்றில் அப்படியான தூபியை அமைப்பதன் முக்கியத்துவம் இது தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நினைவு தூபியை உடைத்தமைக்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உடனடியாக அதனை மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென எம்.எ.சுமந்திரன் குறித்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு இந்த கொடூரச் செயலுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றம் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.