November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிரபராதியென நிரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி’: 6 நாட்களாக உணவுத் தவிர்ப்பில் தமிழ் அரசியல் கைதி

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவணம் செய்துதருமாறு கோரி, புதிய மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவர் ஆறு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் 64 வயதுடைய க. தேவதாசன் என்பவரே இவ்வாறு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அவர் கடந்த புதன் கிழமையில் இருந்து 6 நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் “குரலற்றவர்களின் குரல்” அமைப்புக்கு தெரிவித்துள்ளனர்.

மேல் நீதிமன்ற வழக்குகளில் முறையே 20 ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை என வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் பல வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்களம் தெரியாத நிலையில், நோயுற்ற கைதியாக தான் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த கைதி தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், தான் பிணை அனுமதி பெற ஆவணம் செய்துதருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.