July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் ஜனாதிபதியிடம் இல்லை என்பது அவரது பேச்சில் தெரிகின்றது”: கலையரசன்

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது எனவும் ஜனாதிபதி யுத்தத்தை உதாரணம் காட்டி மிக மோசமாக பேசியிருப்பதாகவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் இருக்கின்றது. இது சுதந்திரம் அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலை மாறவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். ஆனால் அவர்களது பேச்சில் சிறுபான்மை சமூகம் வாழ முடியாது என்பதே வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்,  யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏனைய மக்களையும் அரவணைக்க வேண்டியது நாட்டை ஆளுகின்ற தலைவர்களது தலையாய கடமையாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எம்மை மாற்றுப் பார்வை கொண்டு பார்க்கும் நிலை மாற வேண்டும் என்பதுடன் ஏனைய இனங்களைப் போன்று தமிழ் மக்களும் வாழும் சூழலை உருவாக்கத் தாம் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

This slideshow requires JavaScript.