இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் அரசியல் கைதிகளினதும் உறவுகள் இணைந்து இந்த விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.
சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது வரை சுமார் 14 தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கை அரசு 6 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுவித்துள்ளதுடன் தகுதியான இன்னும் பல கைதிகளை விடுவிக்கவும் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கரிசனை கொண்டு அவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவிவரும் பெருந்தொற்றிலிருந்து அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் படி வேண்டுகோளை முன் வைத்து இவ் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.