July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”உண்மைகளையே கூறினேன் – எதற்கும் மன்னிப்புக் கோர மாட்டேன்”

”அரசாங்கத்திற்கு எதிராக உண்மைகளை பேசியதாலேயே என்னை சிறையில் அடைக்கின்றார்கள். நான் கூறிய எதற்கும் மன்னிப்புக் கோர மாட்டேன்” என்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தினால் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்படும் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

”பிள்ளையானை வெளியில் விட்ட அரசாங்கம் என்னை உள்ளே போடுகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நிறுத்திவிடக் கூடாது. நான் உண்மைகளையே கூறியுள்ளேன். நான் கூறிய எதற்கும் மன்னிப்புக் கோர மாட்டேன்” என்று அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ”நான் ஒரு சதமேனும் திருடியது கிடையாது. எனக்கு கிடைத்த சம்பளத்தையும் மக்களுக்கே கொடுத்தேன். கிடைத்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்தேன். இதற்காக என்னை சிறையில் அடைக்கின்றார்கள். நான் தனிமனிதன் என்பதால் இதற்கு அஞ்சவில்லை. சந்தோசமாகவே போகின்றேன்” என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.