இலங்கையில் தற்போது நிலவும் கொவிட்- 19 வைரஸ் பரவல் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்துதில்லை என்ற தீர்மானம் ஆளும் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், மாகாணசபைத் தேர்தல் குறித்து கேட்கப்பட்ட போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாகக் கூடிய ஆளும் கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டதை அடுத்து, நாட்டின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற சான்றிதழ் கிடைத்தவுடன், மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி, தேர்தல் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.