
இலங்கை சர்வதேச ரீதியாக பெற்றுக்கொண்ட கடன்களில், இந்த ஆண்டு 6,865 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவற்றில், 5,351 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனானாகவும், 1,514 மில்லியன் அமெரிக்க டொலர்களை வட்டியாகவும் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிலும் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளதையும் அமைச்சரவையில் நினைவுபடுத்தியுள்ள பிரதமர், இந்த ஆண்டிலும் கடன்களை முழுமையாகச் செலுத்த முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் 2,991 பில்லியன் ரூபாய் கடனாக பெறுவதற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதோடு, 1,257 பில்லியன் ரூபாய் தேசிய ரீதியிலான கடனாகவும், 606 பில்லியன் ரூபாய் சர்வதேச கடனாகவும் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச கடன் நெருக்கடிகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சர்வதேச கடன்களை நம்பியிருக்கக் கூடாது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.