July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ். பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமே அகற்றப்பட்டது”: கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யுத்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலை உபவேந்தர் மீண்டும் நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னரே, கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சட்டத்துக்கு மாறாக,அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானமொன்று அகற்றப்பட்டது தொடர்பில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும் மாணவர்களின் ஒற்றுமையே கருத்திற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரது எதிர்ப்பு காரணமாக நினைவுச் சின்னத்தை மீண்டும் நிர்மாணிக்க வாக்குறுதியளித்து, யாழ். பல்கலை உபவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.