ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்களை அமெரிக்க நீதிமன்றம் இலங்கையிடம் கோரினால் வழங்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்கள் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடையாததன் காரணமாக அரசாங்கம் பொறுமை காப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கை புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி வருகின்றதை போலவே அமெரிக்காவும் இலங்கையில் விசாரணைகளை நடத்தியது. இதில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் அமெரிக்கப் பிரஜைகள் சிலரும் கொள்ளப்பட்டுள்ளமையால் அவர்களின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு பட்ட சகலருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் வீரசேகர, இப்போது வரையில் 267 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 33 பேர் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.