July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு பிக்குகள் எதிர்ப்பு!

இலங்கை வந்துள்ள யுக்ரைன் சுற்றுலாக் குழுவொன்று இன்று கண்டி தலதா மாளிகைக்கு சென்றதையடுத்து, அந்த இடத்திற்கு சென்ற பிக்குகள் சிலர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலைமையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை இவ்வாறு நாட்டுக்குள் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவது ஆபத்தானது என்று பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளை தலதா மாளிகைக்கு செல்ல அனுமதிக்கப்படாது என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், உரிய பௌத்த பீடாதிபதிகளின் அனுமதியின்றி அவர்கள் இரகசியமாக இங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் யுக்ரைனில் இருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதுடன், அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலனறுவை, சீகிரியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கான அவர்களின் சுற்றுலாப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையிலேயே அவர்களில் ஒரு பகுதியினர் இன்று கண்டி தலதா மாளிக்கைக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு வரும் போது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக தலதா மாளிகை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆனால் இவர்கள் தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாதே அங்கு வந்திருந்தாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.