July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் சுய தனிமைப்படுத்தலில்: இலங்கையின் இன்றைய நிலவரம்!

இலங்கையில் இன்றைய தினத்தில் 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 766 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,091 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 8 உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்காமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளது.

31 எம்.பிக்கள் தனிமைப்படுத்தலில்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புகளை பேணிய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் தற்போது உருவாகியுள்ள கொரோனா கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாராளுமன்ற கொத்தணியும் உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் பணியாற்றும் நிலையில், அவர்கள் அனைவரையும் என்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அத்துடன் நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றம் முழுமையாக தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு என தனியாக சுகாதார வழிமுறைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது, அவற்றையும் முழுமையாக கடைப்பிடித்தே வருகின்றோம். எனினும் இவ்வாறான ஒரு சில செயற்பாடுகள் காரணமாக சிக்கல் நிலைமைகள் உருவாகின்றது, எவ்வாறு இருப்பினும் விரைவாக செயற்பட்டு பாராளுமன்ற கொத்தணி ஒன்று உருவாவதை தடுக்க நடவடிக்கையெடுப்போம் என்று பாராளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.