போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ. அனுசன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவுவிடம் இடித்து அழிக்கப்பட்டமையை தொடர்ந்து எமது மாணவர்கள் 6 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இன்று துணைவேந்தர் தலைமையில் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டதையடுத்து மாணவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்தால் இராணுவ, மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் என்பன பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளே இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததற்கு அமைவாக இன்று நாள் முழுவதும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ. அனுசன் தெரிவித்தார்.