இலங்கைக்கான கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்யும் அரசின் திட்டத்திற்குப் பங்களிப்பு செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதற்கமைய தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டி, அரசாங்கத்திடம் வழங்கத் தீர்மானித்துள்ளன.
ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த தொகையினை தனியார் நிறுவனங்கள் அரசுக்கு உதவியாக வழங்கியுள்ள நிலையில், இப்புதிய திட்டத்தினை வணிகத் தலைவர்கள் குழு முன்னெடுத்துள்ளது.
ஆடை, ஏற்றுமதி, உற்பத்தி, சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சார்ந்த பல நிறுவனங்கள் இந்த நிதியில் பங்களிப்பு செய்ய ஊக்குவிக்கப்படவுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், இலங்கையின் 20% மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ள நிலையில், மேலதிக தடுப்பூசியைக் கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
எனினும் உலகெங்கிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.