தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கைத் தொடர்ந்தும் நடத்துவதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது மனைவி உட்பட பொதுமக்கள் 7 பேரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேநேரம், சட்டமா அதிபரின் ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்கியது.
தன்மீதான குற்றச்சாட்டு போலியான வாக்குமூலங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.