எமது தாய் மண்ணில் தமிழ்த்தேசிய இனமான எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாகவும், உணர்வுகள் சூழ்ந்த இனமாகவும் வாழவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
“உதயநிலா பிரீமியர் லீக்” மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது, இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப் போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன்’ என்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவரொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு குறிப்பிட்டிருந்தான்.
இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்கப்போகின்றோம் என்ற கேள்விகளை எழுப்புகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எம்மை ஆளப்போகிறார்களோ என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞர்களிடம் கோருவது என்னவென்றால் இந்த மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக நாம் வாழவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.